கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுள் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் இயற்கையை அவர்கள் ஒருபோதும் இல்லையென்று சொல்லமுடியாது. இயற்கையின் இயக்கத் தையும் இல்லையென்று சொல்ல முடியாது. இயற்கையின் இயக்கம் எப்படி இயங்குகிறது என்று அவர் களால் சொல்லமுடியாது. கேட்டால், அது அறிவியல் என்று ஒரு பதிலை சொல்வார்கள்.
அத்தகைய அறிவி யல், இயற்கையின் இயக்கத்தின் அடிப் படை ஆதாரத்தை சொல்லமுடியுமா? என்றால் அது முடியாது என்றுதான் சொல்லமுடியும். ஆகவே இயற்கையின் இயக்கம் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற ஆராய்ச்சியைத் தவிர்த்துவிட்டு, அந்த இயக்கம் படைத்த, அந்த இயக்கம் உருவாக்கிய ஆறறிவு படைத்த மனிதன் எனும் அறிவு ஜீவி தனது வேலை என்ன? தனது கடமை என்ன? தனது செயல்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vel_12.jpg)
ஏனென்றால் இவையெல்லாம் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற தனிப்பட்ட விருப்பமோ, சுயநலமோ இல்லாமல் இருக்கிறது ஆறறிவுக்கு குறைவான உயிரினங்கள். ஒரு சிங்கம் இது எனது மதம் என்று சொல்வதில்லை. ஒரு ஒட்டகம் இது எனது மதம் என்று சொல்வதில்லை. பறவை இனங்கள் இது எங்களது மதம் என்று சொல்வதில்லை. அவ்வுயிரினங்களுக்குள் மொழி பேதங்களும் இல்லை. ஆறறிவுக்கு குறைவான உயிரினங்களுக்கு கோவில்கள் கிடையாது. மருத்துவமனை கிடையாது. மளிகைக்கடை கிடையாது. ஜவுளிக்கடை கிடையாது. நகைக்கடை கிடையாது. மருந்துக்கடை கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. தங்குவதற்கு நிலையான அடுக்குமாடி குடியிருப்புகளோ, கான்கிரீட் வீடுகளோ, சாதாரணமான கூரை வீடுகளோகூட கிடையாது. கல்விக் கூடங்கள் கிடையாது. போதிக்கும் ஆசிரியர்களும் கிடையாது. இயற்கை எனும் பரந்த உலகமே அவர்களது வீடு. அவர்களது செயல்பாடுகள் இயற்கை எனும் அரசாட்சியின் கீழ் உள்ளது. இந்த இனங்கள் எதுவும் தங்களுக்குள் இனச் சண்டையோ, மதச் சண்டையோ, பொருள் சண்டையோ, மொழிச் சண்டையோ போட்டுக்கொள்வதில்லை. அந்தந்த உயிரினத்திற்கு பசி வரும்பொழுது அதற்கு தேவையான உணவையோ, கிடைக்கக்கூடிய உணவையோ உண்டு அதன்பிறகு அது தனது வேலையின்மீது கவனத்தை செலுத்தி மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
ஆறறிவு படைத்த மனித இனம் சுமார் 40 வருடங்களுக்குமுன்பு பசிக்காக திருடியது. அன்று மனித சமுதாயம் கல்வி அறிவிலும், நாகரிக வளர்ச்சியிலும், விஞ்ஞான அறிவிலும் இந்த அளவுக்கு மிக உயர்ந்த பரிணாம வளர்ச்சியை பெற்றிருக்கவில்லை. ஆனால் மக்கள் நோயின்றி இருந்தார்கள். சமத்துவ மாக இருந்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தார் கள். அதேவேளையில் வருடம் ஒரு முறை மட்டுமே அவரவர் குலதெய்வங் களுக்கென்றும் இஷ்ட தெய்வங்களுக்கென் றும் தங்களது பக்தியை வெளிப்படுத்து வதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி னார்கள், பக்தி செய்தார்கள். நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் இன்றோ விஞ்ஞான வளர்ச்சி, உலகில் போட்டியாக மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கல்வி அறிவு உச்சம் தொட்டநிலையில், மனித இனம் சுகமான சுகவாசியாக இருப்பதற்காக திருடுகிறான். இல்லையில்லை; கொள்ளை யடிக்க தொடங்கிவிட்டான்.
ஒருவேளை உணவுக்கு வழியில்லாத வன், கோவில் வாசலில் உட்கார்ந்து இறைவனிடம் இறைவா இன்று எனக்கு ஒருவேளை உணவாவது கிடைக்க வேண்டும்.
அதற்கு நீதானப்பா அருள் புரியவேண்டும் என்று வேண்டுகிறான். அதே வேளையில் பகட்டான செல்வ செழிப்பு உள்ள பல பேர் கோவிலின் உள்ளே சென்று இறைவனி டம் எனக்கு இந்த ஒப்பந்தம் கிடைத்து விடவேண்டும். இந்த பொருள் கிடைத்து விடவேண்டும். இதை நானே அனுபவிக்க வேண்டும். இதற்கு நீதான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறான். நமது இந்திய தாய் திருநாட்டில், அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் மிக குறிப்பாக தமிழ் நாட்டில் இல்லாத கோவில்களே வேறு எங்குமில்லை என்று சொல்லும் அளவிற்கு பல்லாயிரம் கோவில்கள் இருக்கிறது. பல நூறு தெய்வங்கள் இருக்கிறது. இந்த கோவில்களுக்கு என்று ஒரு சக்தி இருக்கிறது.
கோவிலில் மூலஸ்தானத்தில் இருக்கக் கூடிய இறைவனுக்கென்று ஒரு அளப்பரிய சக்தி இருக்கிறது. அதே வேளையில் அந்தக் கோவிலுக்குச் சென்று பக்தி என்ற பெயரில் வழிபாடு செய்யும் மனித இனத்திற்கு நல்ல ஒழுக்கம் நிறைந்த உண்மை பக்தி இருக்கிறதா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதை வாழ்வியல் ஞானி மருத்துவ மேதை திருவள்ளுவர் கூறியுள்ளதைப் பார்க்கலாம்-
"பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்.''
ஐம்பொறிகளின் (கண், காது, மூக்கு, வாய், மெய்) வழியாக பிறக்கும் ஐந்துவகை ஆசைகளையும்விட்ட இறைவனது (இயற்கை) பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நீண்ட நெடுநாள் நிலை பெற்று வாழ்வர்.
இந்தக் குறள் வழியாக திருவள்ளுவர் கூறும் கருத்துகளை ஆழ்ந்து சிந்தித்து பகுத்து அறிந்தோம் என்றால், நமது வாழ்நாளில் துன்பம் என்பதே இல்லை. ஐம்பொறிகளின் ஒழுக்க செயல்பாடே மிக உயர்ந்த பக்தி என்று கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் மிகவும் அறுதியிட்டுக் கூறுகின்றார். இதுவரை மேலே நாம் குறிப்பிட்டு வந்த பொருள் பொதிந்த கருத்துக்களோடு இந்தக் குறளையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால், நாம் செய்துகொண்டிருக்கும் இறை பக்தி யின் உண்மை நிலைமையை நாம் ஒவ்வொரு வரும் உணர்ந்து புரிந்துகொள்ளமுடியும். உண்மை பக்தியில் சிறந்து விளங்கமுடியும்.
சிதம்பரம் என்றால் கோவில் என்று பொருள் "உள்ளம் பெரும் கோவில், ஊனுடம்பு ஆலயம்' என்று திருமந்திர சிற்பி திருமூலர் குறிப்பிடுகின்றார்.
அப்படியென்றால், ஆலயம் என்பதற்கு உடல் என்று பொருளாகிறது. உடலுக்கு நம் தாய்த் தமிழில் மெய் என்று ஒரு பொருள் உண்டு. அதை அடுத்து மெய் என்பதற்கு உண்மை என்று ஒரு பொருளும் உண்டு. இங்கே எது உண்மை என்ற அடுத்த கேள்வி வருகிறது? இதற்கு நாம் உணர்ந்த பதில் "வாய்மை' எனப்படும் உண்மையே உடல் "எனும் கோவில்' ஆகும். அந்த உடலே வணங்கத்தக்க இறைவனாக வும், இயற்கையாகவும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும். இங்கே வாழ்வியல் ஞானி திருவள்ளுவர் கூறுவதைப் பார்க்கலாம்-
"யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனத்து
ஒன்றும் வாய்மையின் நல்ல பிற.''
யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள், எந்தவகையிலும் வாய்மை (உண்மை)போல சிறந்த அறம் வேறு ஒன்றுமில்லை.
உனது, மெய்யான (உண்மை) பக்தியே உன்னை மிக உயர்ந்த ஆரோக்கியமான- மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு சொந்தக் காரனாக மாற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை. நம் ஒவ்வொரு வரின் பக்தியிலும் பிற உயிர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படை குணம் நிறைந்து இருக்கவேண்டும். அந்த நினைப்பே அத்தகைய எண்ணமே, அதுபோன்ற சிந்தனையே பக்தி செய்பவனுக்கு அளப்பரிய சக்தியையும் மிகப்பெரிய மகிழ்ச்சியான பலனையும் கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டியதில்லை. அவ்வையார் இயற்றி அருளிய ஆத்திச்சூடியில் "அறம் செய்ய விரும்பு' என்பதே முதல் வரிகளாக இருக்கிறது. இறைவனின் அருளைப்பெற அறம் செய்யவேண்டும் என்று சொன்ன அவ்வையார், அறம் செய்யக்கூடியவனின் மனம் எப்படி இருக்கவேண்டுமென்று பின்வருமாறு கூறுகிறார்.
"இருளைக் கடிந்தின் றிறைவன் அருளால்
தெருளும் சிவசிந்தை யாம்.''
மன மாயைகளைப் (தூய்மை அற்ற எண்ணங்கள்) போக்கிக் கொண்டால் இறைவனின் திருவருள் கைகூடும். அந்த திருவருளின் துணையால், தெளிந்த ஞானம் கிட்டும். அதனால் சிந்தை எல்லாம் சிவமயமாகும்.
அறம் பற்றி வாழ்வியல் ஞானி மருத்துவ மேதை திருவள்ளுவர் கூறுவதைப் பார்க்கலாம்-
"அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.''
இளைஞராக உள்ளவர்கள், "பிற்காலத்தில் செய்வோம்' என்று காலத்தைக் கடத்தாமல் இளவயது முதலே அறச் செயல்களைச் செய்யவேண்டும். அத்தகைய அறமானது அவர் இறக்கும்போதும் அது அவருக்கு இறவாத் துணையாகும்.
ஆறறிவு மனிதனின் பிறவிப் பயன் நீங்க திருமந்திர சிற்பி திருமூலர் கூறும் அறத்தின் பயன்பற்றி பார்ப்போம்-
"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோனி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவம்அறம் வேற்றுணை யாமே.''
வினைப் பயனால் வந்த இந்த பிறவியும் வாழ்வும் பெரிய கடலாகும். இதில்தான் நாம் திளைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிறவித்துயர் கடலை விட்டொழிய நமக்குத் தோனிபோல உதவ இரண்டுவழிகள் இருக்கின்றன. நமது துன்பத்தை போக்க வல்ல அந்த இரண்டு வழிகளாவன: நாமும் நம்மைச் சார்ந்த சுற்றத்தாரும், எல்லையற்ற புகழுடையவனான சிவப்பரம் பொருளின் திருவடி துணைக்கொண்டு, துறவு நிலையிலே நின்று மேற்கொள்ளும் தவமாகும்.
மற்றொன்று, இல்லறத்திலே இருந்து கொண்டு செய்யும் தர்மங்கள் எனும் அறச் செயலாகும்.
பக்தி என்பது கோவில்களுக்கு சென்று வழிபடுவதிலோ, பல்வேறு நதிகளில் சென்று புனித நீராடுவதிலோ, பல்வேறு யாகங்களை செய்வதனாலோ கிடைக்கக்கூடியது அல்ல.
நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்கும் கூறவேண்டும். நம்மால் முடிந்த நல்ல விஷயங் களை ஏதேனும் பிரிதொரு உயிருக்கு உதவி செய்வதுமே மிக உயர்ந்த அறம் நிறைந்த பக்தி யாகும். இதையே இயற்கையில் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்துகொண்டிருக்கும். அனைத்து இயக்கங்களுக்கும் காரணமாக இருக்கும் "மகா சக்தி'யின்மீது நாம் செலுத் தும் பக்தியாகும்.
இறைவனை, இயற்கையை ஈசனை அறியும் அறிவே அறிவாகும். அதற்கு நீ செய்யவேண்டி யது அறம் எனும் தவமாகும். அறத்தை பற்றி திருமந்திரச் சிற்பி கூறுவதைப் பார்ப்போம்-
"துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே.''
வீட்டைத் துறந்து துறவு மேற்கொண்டு, துறவியாகி விட்டவர்களுக்கு, அவர்கள் துறவற வழியைத் தொடர உறவு முறையானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதைப்போன்று இறந்தவர்கள் இவ்வுலகப் பொருட்கள் வழியாக பெறப்போகின்ற இன்பங்கள் என்று எதுவுமில்லை. அறம்... ஆம், "நல்லறம்' செய்ய மறுத்தவர்களுக்கு துணையாகி வழிகாட்ட, இறைவனாகிய ஈசனும் வரமாட்டான். இதை எல்லாரும் அறிந்தே இருக்கின்றனர். என்றாலும் இவர்கள் அறச்செயல் புரியக்கூடிய அறிவு மட்டும் பெறாதவராய் இருக்கிறார்களே! என்ன கொடுமை இது என்று மனம் வருந்துகிறார் திருமூலர்.
எனவே மனித இனமே இப்போதாவது விழித்துக்கொள் அறிவை பயன்படுத்தி. நீ மனம் திருந்தும்போது, இறைவனின் இதயக்கமலம் எனும் இருப்பிடத்தில் உனக்கு ஆனந்தம் எனும் திருவிருந்து காத்திருக்கிறது. பக்தி செய்கிறேன் என்று சுயநலமாக உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய் என்பது புரியாமல், மனம் உவந்து பிறரையும் ஏமாற்றுகிறாய் என்பதையும் உணராமல் இருக்கின்ற நீ, இந்த நிமிடமே உன் மனதை அப்பழுக்கற்றதாய் மாற்றிக்கொள்.
அதோடு நின்றுவிடாமல் பூஜை, புனஸ்காரம், பரிகாரம், வழிபாடு என்று மோசமான பகட்டை தவிர்த்துவிட்டு பரம்பொருளை பற்றிக்கொண்டு, உள்ளன்புடன்கூடிய பக்தியோடு பிற உயிர்களுக்கு உதவும் அறச்செயலை காலதாமதம் செய்யாமல், காலவிரயம் செய்யாமல் உன்னால் இயன்றதை உடனடியாக செய்வதை துவங்கு. அறம் செய்ய துவங்கும். அந்த நிமிடமே உன்னை பரம்பொருளின் கருணை எனும் கரம் பற்றும் அரனைத் தொழுவோம்; அவனது எல்லையில்லா அன்பெனும் அருளைப் பெறுவோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/vel-t_0.jpg)